

புதுடெல்லி,
தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கேரளாவில் வெளுத்து வாங்கியது. கனமழையால், கேரளாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி, இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சுற்றுப்பயணத்தின் போது, வெள்ள பாதிப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வார் என்று தெரிகிறது.
ராகுல் காந்தி, அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.