

புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா கூறும்போது, கட்சியின் பல்வேறு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் உள்ள ஒரே உணர்வு ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே. பல வழிகளில் தங்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டியே ராகுல் காந்தி நீடிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தெலுங்கானா மாநில மூத்த தலைவருமான வி.அனுமந்தராவ், ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டு, கட்சிக்கும், கோடிக்கணக்கான கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் சரியான பாதையை நீங்கள் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.