

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ராம பக்தர்களுக்காக ராம் நாம் என்ற பெயரில் ஒரு வங்கி செயல்படுகிறது. அந்த வங்கிக்கு ஏ.டி.எம்.களோ, காசோலைகளோ எதுவும் கிடையாது. ராமர் பெயர்தான், அங்கு புழங்கும் பணம். அதாவது, வாடிக்கையாளர்களுக்கு 30 பக்க கையேடு ஒன்றை கொடுத்து விடுவார்கள். அதில் 108 தடவை ராமர் பெயரை எழுதிக்கொடுத்தால், அவர்கள் பெயரில் டெபாசிட் செய்து விடுவார்கள். ஒவ்வொரு தடவையும் எத்தனை முறை ராமர் பெயர் எழுதினாலும், அவரவர் பெயரில் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை கொண்டாடும்வகையில், வாடிக்கையாளர்களுக்கு ராம் நாம் வங்கி போனஸ் அறிவித்துள்ளது. அதாவது, அவர்கள் எத்தனை தடவை ராமர் பெயரை எழுதி இருக்கிறார்களோ, அது இருமடங்கு எண்ணிக்கையாக கருதப்படும்.
மேலும், கடந்த 9-ந் தேதி நள்ளிரவில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் தடவை ராமர் பெயர் எழுதியவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.