இடஒதுக்கீடு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இடஒதுக்கீடு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பில், மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, அது மாநில அரசுகளின் விருப்புரிமை என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

இதையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எழுப்பும், அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அமர்த்துவது மாநில அரசுகளின் விருப்புரிமையாக இருக்கக்கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும் என கூறினார்.

இதே போன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உதித்ராஜ், இந்த விவகாரம், பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான முரண்பாட்டை காட்டுகிறது. இதே போன்றதொரு வழக்கில் மத்திய அரசு பதவி உயர்வில் இடஒதுக்கீடுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தது. பாரதீய ஜனதா கட்சி, அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கும், இடஒதுக்கீடுக்கும் எதிரானது என கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் விவகாரக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சாசனத்தில் கூறி இருப்பது பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இதுதொடர்பாக தீர்மானம் இயற்றி, சுப்ரீம் கோர்ட்டு அப்படி ஒரு விளக்கத்தை அளிக்க காரணமான இடைவெளியை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள விளக்கத்தை மறுஆய்வு செய்வதற்கு மனு தாக்கல் செய்ய வழிவகை காண வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com