ரூ.97 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் 16 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் ரூ.97 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். #Kanpur #NIA
ரூ.97 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் 16 பேர் கைது
Published on

கான்பூர்,

கான்பூரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உ.பி. மாநில போலீஸ் திடீர் சோதனையில் ஈடுபட்டது. கான்பூர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் ரூ.97 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கான்பூரில் குடியிருப்பு பகுதியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்பிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சோதனை நடத்தப்பட்டது, என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1,716.5 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள், 685.8 கோடி 1000 நோட்டுக்கள் என ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கி 2016-17-ம் ஆண்டுக்கான ஆண்டறிகையை வெளியிட்ட போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிதம் அதாவது ரூ. 15.28 லட்சம் கோடி வங்கிக்கு வந்துவிட்டது என தெரிவித்தது.

இப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் 5 தனி நபர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு சொந்தமானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 16 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 2 பேர் ஆந்திராவையும், ஒருவர் மராட்டியத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த பணத்தை சட்ட விரோதமாக மாற்றுவதற்காக அங்கே பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் மிகப்பெரிய அளவில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பயங்கரவாத தொடர்பு என்பதை போலீஸ் மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com