

புதுடெல்லி,
இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு 8 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, பொதுமக்கள் ஒரு நாள் சுய ஊரடங்கை ஏற்று கடைப்பிடித்தது மூலம், நாட்டின் முன் மற்றும் மனித குலத்திற்கு முன் தோன்றும் எந்தவொரு பிரச்சனைக்கு எதிராகவும் போராட, இந்தியர்களாகிய நாம் எப்படி ஒன்றிணைந்தோம் என்பது வெளிப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு இந்தியனும் பொறுப்புடன் பங்காற்றி ஒரே நாடாக நாம் இதனை நிறைவேற்றி உள்ளோம்.
கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். உங்களது வீடுகளில் இருங்கள்.
இந்தியா இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை 3 வாரங்கள் தொடர்ந்து முடக்கப்படுகிறது என கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் பேசும்பொழுது, இப்பொழுது கொரோனா வைரஸ் தாக்கினால், அதை தெரிந்து கொள்ள நமக்கு 14 நாட்கள் ஆகும். அதனால் 21 நாட்கள் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. 21 நாட்கள் நம்மை நாம் தனிமைப்படுத்தாவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.
ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத்தீ போல பரவும். ஒருவரை தாக்கும் கொரோனா, 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும்.
அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனா உங்களை தாக்க கூடும். அதனால், நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் எடுக்க வேண்டாம். கவன குறைவாக நீங்கள் செயல்படுவது பெரிய பாதிப்பில் கொண்டு விடும்.
ஆனால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க அது கட்டாயம் தேவை. மாநில அரசுகளின் முதல் பணி, சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதே. தனியார்களும் அரசுக்கு உதவ முன்வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்.
ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாங்கள் பாடுபடுகிறோம்.
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஏழைகளின் கஷ்டத்தை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும் ஊழியர்களும் உதவுகிறார்கள்.
சேவை துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள். ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள் என கைகூப்பி கேட்டு கொள்கிறேன்.
இந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது. சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன. மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளும் திணறுகின்றன.
அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம். கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு உள்ளிட்ட விசயங்களுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.