லடாக் சாலை விபத்தில் 9 வீரர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது: ஜனாதிபதி இரங்கல்

லடாக் சாலை விபத்தில் 9 வீரர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
லடாக் சாலை விபத்தில் 9 வீரர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது: ஜனாதிபதி இரங்கல்
Published on

புதுடெல்லி,

உயரமான பனிப்பிரதேசங்கள், மலைக்குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய லடாக்கில் இந்திய எல்லையில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் இந்த வீரர்கள் தங்கள் பணியிடத்துக்கு வாகனங்கள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன.அவர்கள் காயம் அடைந்த வீரர்களை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்த வீரர்களின் விவரம் உடனடியாக தெரியவில்லை. அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

வாகன விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தனது  'எக்ஸ்' தளத்தில், கூறியிருப்பதாவது: - லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானது வருத்தம் அளிக்கிறது. விபத்தில் காயம் அடைந்த வீரர் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் கடமைப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com