சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கப்பட்டு இறந்தனர்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் ஸ்ரீதர், தப்பிச்செல்லும், சாட்சியங்கள் ஆதாரங்களை கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ப.சிதம்பரம் எதிர் அமலாக்கத்துறை வழக்கில், ஜாமீன் வழங்குவதற்கான நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் வலியுறுத்தியது. அதை ஐகோர்ட்டு மதுரை கிளை கருத்தில் கொள்ளாது, ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீதரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தொடர்பாக சிபிஐ, தமிழக டிஜிபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com