

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள ராஜ் பவனில் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் தலைமையில் சத்யபால் மாலிக் மாநிலத்தின் 13-வது கவர்னராக இன்று பதவி பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக பதவி புரிந்த நரேந்த்ர நாத் வோக்ரா, மாநிலத்தில் அதிக காலம் கவர்னராக பதவி புரிந்தவர்களில் இரண்டாவது நபர் என்னும் சிறப்பை பெற்றார். கரன் சிங் சுமார் 15 ஆண்டுகளும், வோக்ரா சுமார் 10 ஆண்டுகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக அதிக காலம் பதவி வகித்துள்ளனர்.
தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார். அதே போல் பீகார் மாநில கவர்னராக லால் ஜீ தாண்டென் பாட்னாவில் இன்று பதவியேற்று கொண்டார்.