உன்னாவ் கற்பழிப்பு பெண் விபத்தில் சிக்கிய வழக்கு; விசாரணையை முடிக்க சி.பி.ஐ.க்கு 2 வார அவகாசம்

உன்னாவ் கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண் சாலை விபத்தில் சிக்கியது பற்றிய விசாரணையை முடிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு 2 வார கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
உன்னாவ் கற்பழிப்பு பெண் விபத்தில் சிக்கிய வழக்கு; விசாரணையை முடிக்க சி.பி.ஐ.க்கு 2 வார அவகாசம்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட பங்கர்மாவ் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமி ஒருவரை கற்பழித்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். அத்துடன் அவரை பா.ஜனதாவும் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுமாறு குல்தீப் சிங் எம்.எல்.ஏ. சார்பில் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மிரட்டி வந்தனர். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத அந்த பெண், வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன் கடந்த 28ந்தேதி ரேபரேலி மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த லாரியின் பதிவு எண்ணும் மறைக்கப்பட்டு இருந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அத்தைமார் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பெண்ணும், வக்கீலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞரின் வாக்குமூல அறிக்கைகள் பெறப்படவில்லை என கூறி கூடுதலாக 4 வார கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுவில் கோரியிருந்தது.

இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் விசாரணையை முடிப்பதற்கு சி.பி.ஐ. அமைப்புக்கு 2 வார கூடுதல் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஆபத்து கட்டத்திலுள்ள வழக்கறிஞரின் செலவுக்கு உத்தர பிரதேச அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com