

புதுடெல்லி,
பீகார் மாநிலம் முசாபர்பூரில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகம் உள்ளது. அதில், மும்பை அமைப்பு நடத்திய ஆய்வில், 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொண்டு நிறுவன அதிபர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மா பதவி விலகினார். மாநில அரசு, இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது. வழக்கு விசாரணையில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியது.
சிபிஐ தாக்கல் செய்த 73 பக்க குற்றப்பத்திரிக்கையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பிராஜேஷ் தாகூர், சிறுமிகளை சிறிய ஆடையுடன் ஆபாச நடனம் ஆடச் செய்துள்ளான், காப்பகத்திற்கு வந்தவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆட மறுக்கும் சிறுமிகளுக்கு இரவு ஒரு ரொட்டியும், உப்பும் மட்டும் உணவாக கொடுக்கப்படும். சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கொடுமைகள் அங்கு அரங்கேறியும் அதிகாரிகள் அனைத்தையும் தெரிந்து அமைதி காத்துள்ளனர். தாகூரை சந்திக்க விருந்தினராக வரும் நபர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தாகூர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என்றும் பாதிக்கப்பட்ட 33 சிறுமிகள் உள்பட 101 பேர் சாட்சிகள் எனவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் பீகார் அரசு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இப்போது வழக்கு தொடர்பான விசாரணையை பீகாரில் இருந்து டெல்லிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் கேள்விகளுக்கு அரசு தரப்பில் திருப்தியற்ற பதில்களே அளிக்கப்படுகிறது, தலைமை செயலாளருக்கு நேரில் ஆஜராக சம்மன் விடுக்கப்படும் எனவும் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.