

லக்னோ,
உத்தரபிரதேசத்தின் சம்பால் தொகுதி மக்களவை எம்.பி. ஷபீகூர் ரகுமான் பார்க். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியா போராட்டம் நடத்தியதுபோல, தலீபான்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். தங்கள் நாட்டை தாங்களே ஆள எண்ணுகின்றனர். அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். அதில் நாம் எப்படி தலையிட முடியும்? என்றார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலீபான்களை ஒப்பிட்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமாஜ்வாடி எம்.பி ஷபீகூர் ரகுமான் பார்க் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள சமாஜ்வாடி எம்.பி, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலீபான்களை ஒப்பிட்டு நான் பேசவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்தியக் குடிமகன். எனது அரசின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன் என்றார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியா போராட்டம் நடத்தியதுபோல, தலீபான்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர் என சமாஜ்வாடி எம்.பி பேசியிருந்தார்.