

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையும் பதவியேற்றுக்கொண்டது. இன்று யார் யாருக்கு எந்த பொறுப்பு அமைச்சரவையில் வழங்கப்படுகிறது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை பா.ஜனதா தலைவர் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்துறையை பார்த்து வந்த ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
புதிய அமைச்சர்கள் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
புதிய அரசு பதவியேற்ற நிலையில் ஜூன் 17-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 17ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. அப்போது புதிய அரசுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.