‘நாரதா’ லஞ்ச வீடியோ விவகாரம்; 2 மேற்கு வங்காள மந்திரிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்

நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக 2 மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 16-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
‘நாரதா’ லஞ்ச வீடியோ விவகாரம்; 2 மேற்கு வங்காள மந்திரிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்
Published on

நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக 2 மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 16-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச வீடியோ

கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு, நாரதா நியூஸ் என்ற செய்தி இணையதளம், மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சிக்க வைக்க ரகசிய வீடியோ எடுத்தது.அந்த இணையதளத்தை சேர்ந்தவர்கள், தங்களை ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக அறிமுகப்படுத்திக்கொண்டு, முக்கிய பிரமுகர்களை சந்தித்தனர். தங்களது நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அதற்கு பிரதி உபகாரமாக லஞ்சம் கொடுத்தனர். லஞ்சத்தை பெற்றுக்கொண்டபோது, அதை ரகசியமாக படம் பிடித்தனர். இந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

லஞ்ச வீடியோவில் சிக்கிய மேற்கு வங்காள மந்திரிகள் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன்மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மிர்சா ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன.5 பேரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

சம்மன்

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு, கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.2 மந்திரிகள் உள்பட 5 பேருக்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 5 பேரும், நவம்பர் 16-ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்களாக இருப்பதால், சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், மதன்மித்ரா ஆகியோருக்கான சம்மனை சபாநாயகர் அலுவலகம் மூலம் அனுப்புமாறும், மற்ற 2 பேருக்கும் வீட்டு முகவரிக்கு நேரடியாக அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com