விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும் - வேளாண் மந்திரி தகவல்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யும் - வேளாண் மந்திரி தகவல்
Published on

குணா,

டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான மசோதாவும் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றது. இது தொடர்பாக, விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்புக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

அதில், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம் மற்றும் அரியானாவில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதற்கு அந்தந்த மாநில அரசுகள் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் வழக்குகளை திரும்பப்பெறும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை ஏற்று விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று வந்திருந்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரிடம், இந்த வழக்குகள் திரும்பப்பெறும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறும் விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் கடந்த ஓராண்டாக நான் தொடர்பில் இருக்கிறேன். இன்று (நேற்று) காலையில் கூட அவர்களுடன் பேசினேன். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் வெற்றி அல்லது தோல்வி என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த பிரச்சினையை நீங்களும் அப்படி பார்க்காதீர்கள்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் முடிவை அனைத்து விவசாயிகளும் வரவேற்று உள்ளனர். இது விவசாயிகளின் மரியாதையை உறுதி செய்திருக்கிறது. தற்போது அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பி வருகின்றனர்.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com