

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்களை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, அந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 11-ந்தேதி உத்தரவிட்டது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 4 நிபுணர்களை கொண்ட குழுவை நியமித்தது.
அதில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து விலகிக்கொண்டார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சேத்காரி சங்காதனாவின் தலைவர் அனில் கான்வாட், வேளாண் பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாதி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் மட்டும் இயங்கி வருகிறார்கள்.
அவர்கள் நேற்று விவசாய அமைப்புகளுடன் தங்கள் ஆலோசனையை தொடங்கினர். காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மராட்டியம், உத்தரபிரதேசம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 10 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
அவர்களிடம், வேளாண் சட்டங்களை பற்றிய கருத்துகளை நிபுணர் குழு கேட்டது. விவசாய அமைப்பினரும் வெளிப்படையாக கருத்துகளையும், வேளாண் சட்ட அமலாக்கத்தை செம்மைப்படுத்துவது குறித்த யோசனைகளையும் தெரிவித்தனர்.
இத்தகவலை நிபுணர் குழு ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.