தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
Published on

புதுடெல்லி,

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ரவீந்திரநாத் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள், கடன் விவரங்களை மறைத்துள்ளார். மேலும் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகம் நடந்தது. அதனால் அந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மிலானி தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு பின்னர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தனது வெற்றி செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com