

புதுடெல்லி,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வருகிற 17-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது நிர்வாக பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும். ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும் என்று தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, வருகிற 20-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனவே அதற்கு முன்பு அவசர வழக்காக கருதி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையீடு செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.