

புதுடெல்லி,
கேரளாவில் பருவ மழையின் கோரத்தாண்டவம் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது. முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்கு தள்ளி இருக்கிறது.
சாலைகள் அனைத்தும் நீரோட்டமாக மாறியிருப்பதால், அங்கு பாதை எது? ஆறு எது? என வேறுபாடு காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வெள்ளக்காடாகி வருகிறது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை, பேரிடர் மீட்புக்குழு முப்படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சமடைந்து இருக்கின்றனர். கனமழை காரணமாக கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவச சேவையை ஒருவாரத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளன.
வோடோபோன், பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளன. போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டித்துள்ளன. ஐந்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 7 நாட்களுக்கு இலவச இணையசேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளன.