

மூணாறு,
இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 17 தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து பலியான சோகம் நிகழ்ந்து உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.
மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தோட்டத்தின் அருகிலேயே குடியிருப்பும் உள்ளது. அங்குள்ள வீடுகளில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
நிலச்சரிவில்20 வீடுகள் நாசம்
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின். அந்த வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன.
அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களில் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். என்ன நடக்கிறது என்பதை கூட அவர்களால் உணர முடியவில்லை. அவர்களில் 3 பேர் மட்டும் எப்படியோ தப்பி விட்டனர். அவர்கள் அருகே உள்ள குடியிருப்புக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், கட்டப்பனை ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர் அங்கு வந்தனர். பொதுமக்கள், தீயணைப்பு படையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் சேர்ந்து மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் சரிந்து கிடந்த மண் குவியல்களை அகற்றிய போது, ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகி இருப்பது தெரியவந்தது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த காந்திராஜ் (வயது 48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாத்துரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) உள்பட 17 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.
இறந்த அனைவரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கோலாஞ்சேரி, மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள 42 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.
ராஜமலையில் இருந்து பெட்டிமுடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் பெட்டிமுடி பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவும், அந்த பகுதியில் ஓடும் பெரியபாறை ஆற்றின் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் மீட்புக்குழுவினர் வந்து சேர தாமதம் ஆனதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலச்சரிவு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ்ஐ.ஜி.அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெட்டிமுடியில் நிலச்சரிவில் சிக்கி பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார்.
மேலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.