கர்நாடக மாநிலம் மைசூருவில் 5 நாளில் கொரோனாவை வென்ற 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

கொரோனா தொற்றுக்கு ஆளான கர்நாடக மாநிலம் மைசூருவில் 103 வயதான சுதந்திர போராட்ட வீரர் அதை 5 நாட்களில் வென்று வீடு திரும்பியது வியப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் 5 நாளில் கொரோனாவை வென்ற 103 வயது சுதந்திர போராட்ட வீரர்
Published on

சுதந்திர போராட்ட வீரர்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த துரைசாமி 1918-ம் ஆண்டு பிறந்தவர். காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தியாகி துரைசாமி ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனுமான மஞ்சுநாத், துரைசாமிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கினார். இதையடுத்து பூரணமாக குணமடைந்த துரைசாமி வீடு திரும்பினார்.

இதுகுறித்து டாக்டர் மஞ்சுநாத் கூறியதாவது:-

கொரோனா தொற்றுக்கு ஆளான போதும் தியாகி துரைசாமி மற்றவர்களை போல அச்சம் அடையவில்லை. காய்ச்சலும், உடல் சோர்வும் தீவிரமாக இருந்த போதும் அவர் துவண்டு விடவில்லை. தகுந்த நேரத்தில் துரைசாமிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டதால் தொற்று பரவுவது தடுக்கப்பட்டது. இதனால் அவரால் கொரோனாவை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. அவர் வீட்டுக்கு போகும் போது, இனி நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் மட்டும் அல்ல. கொரோனா எனும் கொடிய வைரசையும் வென்ற வீரர் என்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குணமடைந்த துரைசாமி கூறும் போது, கொரோனா ஒன்றும் கொடிய பேய் அல்ல. அதனை பார்த்து பயப்பட தேவையில்லை. வைரஸ் தாக்கிய உடன் தகுந்த மருத்துவ சிகிச்சையும், நல்ல ஆலோசனையும் கிடைத்தால் அந்த வைரசை கொன்று விடலாம். என்னை பொறுத்தவரை மருந்து என்னை குணமாக்கியதை விட எனது தன்னம்பிக்கை தான் என்னை குணமாக்கியது. 103 வயதான நானே, ஐந்தே நாட்களில் கொரோனாவை வென்றிருக்கிறேன் என்பது மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எனவே எத்தகைய சிக்கல் வந்தாலும் தன்னம்பிக்கையோடு கொரோனாவோடு போராடுங்கள் என்பதே என்னை விட இளையவர்களுக்கு நான் கூறும் செய்தி என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com