

புதுடெல்லி,
குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் தொடங்கியது. இதில் அபராத தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அதை குறைத்து, 2017 அக்டோபர் 1-ந் தேதி முதல் வசூலித்து வருகிறது.
இதில் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.790.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னர் 2017-18-ம் ஆண்டில் அதிக அளவாக ரூ.3,368.42 கோடியை வங்கிகள் வசூலித்தன. இதன் தொடர்ச்சியாக 2018-19-ம் ஆண்டில், அதாவது கடந்த மார்ச் இறுதிவரை 18 பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.1996.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார். இந்த அபராத நடைமுறையானது ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.