

புதுடெல்லி,
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த 33 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, நடுவானில் விமானத்திலேயே அவருக்கு பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து, தாய்க்கும், சேய்க்கும் உடனடி மருத்துவ பராமரிப்பு தேவை என்பதற்காக, அவர்களை ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட்டில் இறக்கி விட சிப்பந்திகள் முடிவு செய்தனர். அதன்படியே, விமானத்தை பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி, அவர்களை இறக்கி விட்டனர்.
32 வாரம்வரையிலான கர்ப்பத்தை சுமக்கும் பெண்கள், டாக்டர் சான்றிதழ் இல்லாமல் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால், அந்தப்பெண் 29 வார கர்ப்பத்துடன் இருந்தபோதிலும், டாக்டர் சான்றிதழுடன் வந்தார். அவருக்கு டிசம்பர் 20-ந் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பாராதவகையில், 2 மாதங்களுக்கு முன்பே குழந்தை பிறந்துள்ளது.