நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

இந்திய பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த விரிவான பார்வையை இந்த ஆய்வறிக்கை வழங்கும்.
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சகம் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவு இந்த ஆய்வறிக்கையை தயாரிக்கும். கடந்த ஆண்டில், இந்திய பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த விரிவான பார்வையை இந்த ஆய்வறிக்கை வழங்கும்.

அந்த அடிப்படையில், 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பொருளாதார ஆய்வறிக்கையின் நகல், அனைத்து உறுப்பினர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும் என கூறினார்.

பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்: உலகப் பொருளாதார நிலைமைகள் நிச்சயமற்றதாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. என்ற போதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் அபாயங்கள் அதிகமாக இருந்தாலும், பல நாடுகளின் பொருளாதாரங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது.

எனவே, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்றும், 2027-28 நிதி ஆண்டில் இது 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 7.4 ஆக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியம் 7.3% ஆக இருக்கும் என்றும், உலக வங்கி 7.2% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளன. இது நிதி அமைச்சகத்தின் முந்தைய கணிப்போடு ஒத்துப்போகிறது.

உள்நாட்டுத் தேவையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையான உந்துசக்தியாகத் திகழ்கிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் நிலவும் வலுவான நுகர்வோர் தேவை, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரிச் சீரமைப்பு நடவடிக்கைகள் நகர்ப்பற நுகர்வில் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை வலுவாக உள்ள போதிலும், உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கம் தாமதமாக வெளிப்படக்கூடும் என்பதால், கொள்கை வகுப்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com