பீகார் தேர்தலில் வெற்றியை தீர்மானித்த பெண் வாக்காளர்கள்

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பெண் வாக்காளர்களின் வாக்குகள் சாதகமாக அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலில் வெற்றியை தீர்மானித்த பெண் வாக்காளர்கள்
Published on

பாட்னா,

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போதுமான இடங்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தீர்மானிப்பதில் பெண் வாக்காளர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பீகாரில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மூன்று சட்டமன்ற தேர்தல்களாக ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமான வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அதே போல இந்த ஆண்டு தேர்தலிலும் ஆண் வாக்காளர்கள் 54.7 சதவீதம் பேர் வாக்களித்துள்ள நிலையில், அவர்களை விட 5 சதவீதம் அதிமாக பெண் வாக்காளர்கள் 59.7 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பீகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவுகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதிலும் குறிப்பாக நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், மொத்தம் உள்ள 78 தொகுதிகளில் 53 தொகுதிகள் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி வசம் இருந்தது. இதற்கிடையில் நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசு பெண்களுக்கு சாதமாக கொண்டு வந்த சில திட்டங்களால், இந்த தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என கணிசமான பெண்கள் கருத்து தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், ஆண்களை விட அதிகமான அளவில் பெண் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருப்பது, 118 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பீகார் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்த போது, பீகார் பெண்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com