கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது: டாக்டர்கள் தகவல்

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது: டாக்டர்கள் தகவல்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 35 வயதான நர்ஸ் ஒருவருக்கு திடீரென உடல்நல குறைவும், மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக அவர் நில் ரத்தன் சிர்சார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தடுப்பூசி போட்டதால் அவர் மயக்கமடைந்ததற்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாகவும், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த நர்சுக்கு நாள்பட்ட ஆஸ்துமா இருந்ததாக கூறியுள்ள டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் மேலும் 13 பேருக்கு தடுப்பூசியால் லேசான பக்க விளைவுகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் முதற்கட்ட சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு சென்றிருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com