

போபால்,
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசும், பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மாநில அரசுகளும் பசுக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இந்திய கால்நடைகள் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி பிரதாப் சாரங்கி கலந்துகொண்டு பேசும்போது, பசுக்களை இந்துக்கள் பிரச்சினை என்றோ, முஸ்லிம்கள் பிரச்சினை என்றோ பார்க்கக்கூடாது. பசுக்கள் இந்துவும் இல்லை, முஸ்லிமும் இல்லை. அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவை என்றார்.
பின்னர் சாரங்கி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியபிரதேச மாநில அரசு ஆயிரம் நவீன கோசாலைகள் (மாட்டுத் தொழுவம்) கட்டப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை பாதுகாக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். ராமஜென்ம பூமியில் கோவில் கட்டப்பட வேண்டும். பாபர் வெளிநாட்டில் இருந்து வந்தவர். அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தில் மசூதி இல்லை. ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது. ராமர் மற்றும் பசுக்கள் பெயரால் பாரதீய ஜனதா அரசியல் செய்யவில்லை இவ்வாறு அவர் கூறினார்.