

புதுடெல்லி,
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-உசேன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது சுற்றுப்பயணத்தின் நிறைவு நாளான நேற்று டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்டார்.
இஸ்லாமிய பாரம்பரியம்: புரிதல் மற்றும் மட்டுப்படுத்தலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றும்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகில் உள்ள அனைத்து முக்கியமான மதங்களின் தொட்டிலாக இந்தியா விளங்கி வருகிறது. இந்த நீண்டகால பன்மைத்துவத்தின் ஒரு கொண்டாட்டமே இந்திய ஜனநாயகம் ஆகும். அனைத்து மதங்களும் மனித மதிப்புகளையே ஊக்குவிக்கிறது.
எனவே நமது இளைய சமுதாயம் இஸ்லாத்தின் மனிதாபிமான அம்சங்களில் தங்களை பிணைத்துக்கொள்வதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் முடியும். தங்கள் மதத்துக்காக பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறுபவர்கள், உண்மையில் தங்கள் சொந்த மதத்தையே காயப்படுத்துகின்றனர்.
தவறாக வழிநடத்துதல்
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மதத்துக்கும் எதிரானது அல்ல. மாறாக இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுவது, அப்பாவிகளை சித்ரவதைக்கு தூண்டுவது போன்ற தவறான வழிநடத்தும் மனநிலைக்கு எதிரானது மட்டுமே.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதே கருத்தை ஜோர்டான் மன்னரும் வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், மதங்கள் அனைத்தும் மனிதர்களை ஒன்றாக இணைக்க வேண்டும். எனவே வெறுப்பை பரப்புவோருக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவரும் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஜோர்டான் மன்னரின் நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர் மோடி, இது தொடர்பாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோர்டான் மன்னருக்கு உருது மொழிபெயர்ப்பு நூலான இஸ்லாமுக்கு ஒரு சிந்தனை நபரின் வழிகாட்டி என்ற புத்தகத்தை வழங்கினார். மன்னரின் உறவினரான இளவரசர் காஜி பின் முகமதுவே இந்த நூலின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.