கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரியாக இருந்த அனந்தகுமார் அதே கருத்தை தெரிவித்தார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம், பிரிட்டீஷ் நாட்டை தழுவி எழுதப்பட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆங்கிலேயரின் அரசியல் சாசனத்தில் இட ஒதுக்கீடு என்ற அம்சம் உள்ளதா?.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு வந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற நாடுகளின் சில அம்சங்கள் மட்டுமே அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதித்துறை மீது பா.ஜனதா தாக்குதல் நடத்துகிறது. துணை ஜனாதிபதி நீதித்துறையை தாக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மத்திய சட்டத்துறை மந்திரி நீதித்துறையை தாக்கி கருத்துகளை தெரிவிக்கிறார்.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இருட்டில் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை எங்கு பின்பற்றப்படுகிறது?. நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு எடுக்கும் குழுவில் அரசின் பிரதிநிதி இருக்க வேண்டும் மத்திய அரசு சொல்கிறது.

இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கண்டிக்கிறது. நீதித்துறை மீதான தாக்குதலுக்கு எதிரான மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அரசின் கொள்கையாக மாற்றப்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அந்த மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், எப்போதாவது தங்கள் ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி இருக்கிறாரா?. இத்தகையவர்கள் காங்கிரசை குறை கூறினால் அதை நாங்கள் கண்டு கொள்ள வேண்டுமா?. இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com