நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மத்திய அரசின் சார்பில், மக்களவை பா.ஜ.க. துணைத்தலைவரும், ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை பா.ஜ.க. தலைவரும், மத்திய தொழில், வர்த்தக மந்திரியுமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்துக் கட்சி தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (தி.மு.க.), சுதீப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), பினாகி மிஸ்ரா (பிஜூஜனதாதளம்), விஜய்சாய் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்), கேசவ் ராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), ஏ.டி.சிங் (ராஸ்டிரிய ஜனதாதளம்), சஞ்சய் ராவத் (சிவசேனா) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் முக்கிய தலைவர்கள், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியவற்றின் சாராம்சங்கள் வருமாறு:-

பிரகலாத் ஜோஷி (நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி):-

நாடாளுமன்ற விதிகள்படியும், நடைமுறைகள்படியும் எல்லா பிரச்சினைகளையும் விவாதிப்பதற்கு அரசு திறந்த மனதுடன் இருக்கிறது.

மல்லிகார்ஜூனகார்கே (மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்):-

32 மசோதாக்களை அரசு வரிசையில் வைத்திருக்கிறது. ஆனால் மசோதாக்கள் பற்றிய தகவல்களை தரவில்லை. 14 நாளில் இவற்றை அரசு நிறைவேற்றி விடுமா? அரசு என்ன செய்ய முயற்சிக்கிறது?

விலைவாசி உயர்வு, அக்னிபத் திட்டம், நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 13 பிரச்சினைகளை எழுப்பினோம் என்று அவர்கள் கூறினார்கள்.

பிரதமர் வராத பிரச்சினை

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளாததை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு பிரச்சினையாக எழுப்பினார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், " வரவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வழக்கம்போல பிரதமர் வரவில்லை. இது முறையானதா?" என கேட்டிருந்தார்.

பா.ஜ.க. பதிலடி

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ஜெய்ராம் ரமேசுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் எத்தனை முறை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வந்துள்ளார்? அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சபையின் மிக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கி உள்ளார்" என குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தகாத வார்த்தைகள் என பட்டியலிட்டு இருப்பது வழக்கமான நடைமுறைதான். சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும்தான் எது தகாத வார்த்தை என்பதை தீர்மானிக்கிற உரிமையைப் பெற்றுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சிகள் இல்லாத பிரச்சினைகளை, பிரச்சினைகள் ஆக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com