சார்மடி மலைப்பாதையில் குத்தாட்டம் போட்ட சுற்றுலா பயணிகள்

சார்மடி மலைப்பாதையில் சாலையோர திடீர் அருவிகளில் குளித்து சுற்றுலா பயணிகள் குத்தாட்டம் போட்டனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சார்மடி மலைப்பாதையில் குத்தாட்டம் போட்ட சுற்றுலா பயணிகள்
Published on

சிக்கமகளூரு-

சார்மடி மலைப்பாதையில் சாலையோர திடீர் அருவிகளில் குளித்து சுற்றுலா பயணிகள் குத்தாட்டம் போட்டனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் பருவமழை தொடங்கினாலும், பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்காவில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த தொடர் கனமழையால் சிக்கமகளூருவில் உள்ள சுற்றுலா தலங்களில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிக்கமகளூருவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

சார்மடி மலைப்பாதை

சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலை, சந்திர திரிகோண மலை பகுதிகள் பச்சை பசேலென்று காட்சி அளிப்பதுடன், ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் மலை மீது மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மூடிகெரே அருகே சார்மடி மலைப்பாதை உள்ளது. சிக்கமகளூரு-மங்களூருவை இணைக்கும் பிரதான சாலை இதுவாகும். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சார்மடி மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகள் தோன்றி உள்ளன.

இதனால் சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சார்மடி மலைப்பாதையில் இயற்கை அழகை ரசித்தும், அருவிகளில் குளித்தும் செல்கிறார்கள்.

குத்தாட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வந்தவர்கள், தங்கள் வாகனங்களில் மங்களூருவுக்கு சென்றனர். அவர்கள் சார்மடி மலைப்பாதையில் சாலையோரம் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு அருவியில் குளித்து மகிழ்ந்ததுடன் இயற்கை அழகையும் பார்த்து ரசித்தனர். மேலும் உற்சாக மிகுதியில் சுற்றுலா பயணிகள் சார்மடி மலைப்பாதை சாலையில் ஆடி, பாடி குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

இதனால் சார்மடி மலைப்பாதை சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தியதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் போலீசார், சுற்றுலா பயணிகளின் உற்சாகத்தை தடுக்காமல் அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சாலையோர தடுப்பு சுவரில் ஏறி செல்பி எடுக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com