

புதுடெல்லி,
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இன்று புதுடெல்லியில் உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் இந்தியாவில் தொழில் முனைவோர் வங்காளதேசத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றார். இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி தடை குறித்து அவர் நகைச்சுவையாக விமர்சித்தார்.
அதில், இப்போதெல்லாம் எங்களுக்கு வெங்காயம் கிடைப்பது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. எதற்காக எங்களுக்கு வெங்காய சப்ளையை இந்தியா நிறுத்தியது என்று தெரியவில்லை. எனது சமையல்காரரிடம் உணவில் வெங்காயத்தை சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார். மேலும் அடுத்த முறை இது போன்ற முடிவுகளை எடுக்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடையால் வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெங்காய விலை உயர்ந்தது.
இதனை கட்டுப்படுத்த வங்காளதேச அரசாங்கம் மியான்மர், எகிப்து, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளிடம் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.