உத்தரபிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு..!

உத்தரபிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு..!
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் இருந்தனர். தாஜ்புரா என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

அப்போது கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் பலர் அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை கால்வாயில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடியவிடிய மீட்பு பணிகள் நடந்தன.

இந்த நிலையில் நேற்று காலை கால்வாயில் இருந்து மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 9 ஆனது. உயிரிழந்த 9 பேரில் 4 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே டிராக்டரில் பயணித்த கிராம மக்கள் கால்வாய் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என டிரைவரை எச்சரித்ததாகவும், அதை புறக்கணித்துவிட்டு டிரைவர் அந்த வழியாக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க சஹாரன்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றவர்கள் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com