பாகிஸ்தான் பயணம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயணம் குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்
Published on

புதுடெல்லி,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். அதேசமயம் வர்த்தகம், ராணுவத்தை பலப்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அமைப்பின் ஒத்துழைப்பு மாநாடு அதன் உறுப்பு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு பாகிஸ்தான் தலைமையேற்கிறது. வருகிற 15 மற்றும் 16-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து ஜெய்சங்கர் பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்காகவே பாகிஸ்தான் செல்வதாகவும், அப்போது இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை எனவும் அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரத்துக்கு மத்தியில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் வெளியுறவுத்துறை மந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com