மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல்
Published on

புதுடெல்லி,

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், தலாக் என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது. அதன்பின்னர் புதிய அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முத்தலாக் தடை மசோதா மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநிலங்களவைக்கு அனைத்து பாஜக எம்.பி.க்களும் தவறாமல் செவ்வாய்க்கிழமை வர வேண்டும் என்று அக்கட்சி மேலிடம் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும், மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை எதிர்க்கப் போவதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com