சட்டவிரோத ஆக்கிரமிப்பு; பா.ஜ.க. தொண்டரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய அதிகாரிகள்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர் ஸ்ரீகாந்த் தியாகியின் இல்லத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதி புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப்பட்டது.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு; பா.ஜ.க. தொண்டரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய அதிகாரிகள்
Published on

நொய்டா,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரிவு 93ல் கிராண்ட் ஓமேக்ஸ் என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இதில், உள்ள பூங்கா பகுதியில் ஸ்ரீகாந்த் தியாகி என்பவர் சட்டவிரோத முறையில் குடியிருப்பு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என புகார் எழுந்தது.

இதுபற்றி 2019ம் ஆண்டில் குடியிருப்பு உரிமையாளர்கள் நொய்டா அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோரியிருந்தனர். இதனால், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தியாகிக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

அவர் தன்னை பா.ஜ.க. தொண்டர் என கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது நன்மதிப்புகளை குலைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாக பரவியது. அவரது இந்த செயலுக்கு நொய்டா போலீசார் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, தியாகியின் உறவினர்கள் 6 பேர் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று அந்த பெண்ணை தேடியுள்ளனர். தகராறிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவமும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதில் மற்ற குடியிருப்புவாசிகள் அவர்கள் 6 பேரையும் பிடித்தனர். பின்பு போலீசில் ஒப்படைத்தனர். எனினும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வீடியோவை பாருங்கள் என 6 பேரும் கூறியுள்ளனர். இந்நிலையில், தியாகி தப்பியோடி தலைமறைவானார்.

இந்த சூழலில், சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள தியாகியின் இல்லம் அமைந்த பகுதிக்கு போலீசார் துணையுடன் நொய்டா நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் சென்றது. அவரது சட்டவிரோத ஆக்கிரமிப்பு இல்லத்தின் பகுதியை புல்டோசர் கொண்டு அதிகாரிகள் இடித்து தள்ளியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com