‘சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர்’ அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு

இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக அமித்ஷா கூறினார்.
கொச்சி,
துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இது குறித்து அவர் கூறுகையில், ‘சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார்’ என குற்றம் சாட்டினார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்தி போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சுதர்சன் ரெட்டி, சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, இடதுசாரிகளின் அழுத்தத்தின்பேரில் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பதாகவும் சாடினார்.






