6 -12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனை - டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பணிகள் தீவிரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொள்வதற்கு தகுதியான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
6 -12 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனை - டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பணிகள் தீவிரம்
Published on

புதுடெல்லி,

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான முதற்கட்ட ஆய்வக சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகளை நடத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசியின் 2-ம் கட்ட மருத்துவ சோதனை தொடங்கியது. இதில் 54 சிறுவர்கள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யும் திட்டம் தொடங்க உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்கு தகுதியான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கனவே 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வயதினருக்கு கோவேக்சின் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் 2 முதல் 6 வயதினருக்கு தடுப்பூசி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் 12 முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் 12-15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி 100 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டு அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 6 மாதத்தில் இருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

இதே போல மாடர்னா தடுப்பூசி நிறுவனமும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் 3வது அலை பரவல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகள் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com