

புதுடெல்லி,
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது.
''தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து, இன்னும் 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் புதிய உத்தரவை வெளியிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மின்சார இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு மனு தாக்கல் செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.