

சண்டிகார்,
அரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு சண்டிகாரில் 2 பேர் பின்தொடர்ந்து தொல்லை செய்து, கடத்த முயற்சித்துள்ளனர். இருவர் அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ், அவரது நண்பர் ஆசிஷ் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தை மகளிர் ஆணையம் கையில் எடுத்தது. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, விகாஸ், ஆசிஷ் மீது நடவடிக்கை கோரி, அந்த மாநில ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான ஐ.ஏ.எஸ். அதிகாரி, இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக விட்டாலோ, போதுமான வகையில் குற்றம் சாட்டாவிட்டாலோ நாங்கள் கோர்ட்டை நாடுவோம் என எச்சரித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தன்னை கடத்துவதற்கு முயற்சி செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் சண்டிகார் போலீஸ் கடத்தல் முயற்சி குற்றச்சாட்டில் வழக்கை பதிவு செய்யவில்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதா குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டியது. போலீஸ் விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் மிகவும் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் சண்டிகார் போலீஸ் சம்மன் வழங்கியது.
போலீஸில் ஆஜராக உத்தரவிடப்பட்ட காலக்கெடு முடிந்து 3 மணி நேரம் ஆன பின்னர் விவகாஸ் மற்றும் ஆசிஷ் போலீசில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரிக்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்து உள்ளது.
இருவரையும் போலீஸ் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைது செய்து உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 365 மற்றும் 511-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும். இருவரும் நாளை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார்கள், அவர்களை காவலுக்கு அனுப்ப கேட்டுக் கொள்வோம். இவ்வழக்கில் பல்வேறு உண்மைகள் ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவையானது உள்ளது, என போலீஸ் தெரிவித்து உள்ளது.
முன்னதாக இருவர் மீதும் பெண்ணை பின்தொடர்தல் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.