உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Published on

லக்னோ,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர்.

25 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். 40 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பா.ஜனதா வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும்.

தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தேர்தல் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேற்று காலையில் இருந்து செல்ல தொடங்கினர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகள், மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ளன. அங்கு ஜாட் இனத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடம் பிடித்துள்ளது.

பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது.

கொரோனா காரணமாக, பொதுக்கூட்டம், வாகன அணிவகுப்பு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதால், அரசியல் தலைவர்கள் காணொலி மூலமாகவே பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி, அமித்ஷா, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் காணொலி வாயிலாக பிரசாரம் செய்துள்ளனர். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com