ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். #PmModi
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இங்கு ஒரு ஆஸ்பத்திரியை திறக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார். அவரை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்து இருந்தனர்.

திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடிப்பில் சீக்கியர்கள் உள்பட 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பிரதமர் மோடி கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆப்கானிஸ்தானில் நேற்று நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆப்கானிஸ்தானின் பன்முகத்தன்மை மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com