மே.வங்க ரெயில் விபத்து: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
மே.வங்க ரெயில் விபத்து: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
Published on

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரெயில் விபத்தில் உயிர்களை இழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "மேற்கு வங்கத்தில் நடந்த ரெயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செல்ல இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com