

மண்ட்சாவுர்,
வேளாண் விளை பொருட்கள் நல்ல ஆதரவு விலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்த போராட்டத்தின்போது மண்ட்சாவுர் மாவட்டத்தில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியாயினர். இதனால் கொந்தளித்த விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தீவிர படுத்தி வருகின்றனர். அவர்களுடைய கிளர்ச்சி நேற்று 10வது நாளை எட்டியது. இதனால் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் விவசாயிகள் கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக எந்தஒரு அறிவிப்பையும் சிவராஜ் சிங் சவுகான் வெளியிடவில்லை.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டமானது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விவசாயிகள் விஷமோ, தோட்டாவோ மரணம் எங்களுக்கு விதிக்கப்பட்டது என வேதனையுடன் கூறிஉள்ளனர். தனியார் செய்தி சேனல் மத்திய பிரதேச மாநில விவசாயிகளின் அவல நிலையை தொகுத்து வழங்கி உள்ளது.
சோக்தி கிராமத்தை சேர்ந்த 55 வயதாகும் விவசாயி பகவந்த் சிங் பேசுகையில்,, விவசாயிகளுக்கு அவர்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைப்பது கிடையாது. அவர்களுடைய உரிமைகளுக்காக போராடும் போது அரசு நிர்வாகம் அவர்களை கொல்லுகிறது. எனவே விஷமோ, போலீஸ் தோட்டாவோ மரணம் எங்களுக்கு விதிக்கப்பட்டது. யதார்த்தமானது. மரணத்துடன் விவசாயிகளின் விதி முடிக்கப்படுகிறது, என வேதனையுடன் கூறிஉள்ளார். கோதுமை விவசாயியான பகவந்த் சிங் 5 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். கோதுமை சில்லறை விற்பனையில் குவிண்டால் ரூ. 4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது, ஆனால் விவசாயிகளிடம் ரூ. 1,300க்கு வாங்கப்படுகிறது.
சிங் பேசுகையில், எனக்கு சொந்தமாக சிறியதாக நிலம் உள்ளது. அதில் 25 குவிண்டால் அளவு கோதுமை உற்பத்தி செய்து உள்ளேன். எனக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,300 முதல் 1,500 வரை கிடைத்தது. இதுவரையில் நான் 25 குவிண்டால்களை ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்து உள்ளேன். இது நான் முதலீடு செய்த தொகையாகும், விவசாயிகளுக்கு ஏதாவது நலன் கிடைக்கவேண்டும். எனக்கும் குழந்தைகள் உள்ளது.அவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும், அவர்களை படிக்க வைக்க வேண்டும். எங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு அரசு நல்ல விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், என்றார். ஒவ்வொரு கிராமத்திலும் இதே நிலைதான் நீடிப்பதாக செய்தி சேனல் குறிப்பிட்டு உள்ளது.
பகவந்த் சிங்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவருடைய உடல் நலம் சரியில்லாத தாயாரை கவனித்து வருகிறார்.அவர்களுடைய குடும்பமானது விவசாயத்தை சார்ந்தே உள்ளது. முரண்பாடாக அவர்கள் விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பாதி விலைதான் கொடுக்கிறது, ஆனால் அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டியது. பருவமழை மோசமடைந்தால் அவர்களுடைய வாழ்க்கையே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதும் அவர்களுடைய அச்சமாக உள்ளது.
மழை பெய்யவில்லை என்றால், எங்களுக்கு சாப்பிட எதுவும் கிடையாது. விவசாயிகளுக்காக மோடி அரசு எதையும் செய்யவில்லை எனவும் சாடிஉள்ளார் பகவந்த் சிங்.
இதுபோன்ற கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் பேசிஉள்ளனர், அவர்கள் விவசாய விளைபொருள் நன்றாக இருந்தாலும் போதிய விலை கிடைப்பது கிடையாது என வர்த்தத்துடன் கூறிஉள்ளனர்.
நரேந்திர சிங் சாக்தாவாத் என்ற விவசாயி பேசுகையில் விவசாயம் நல்லபடியாக இருந்து விளைச்சல் பெருகினாலும் விவசாயிகள் வெறும் கையுடன்தான் திரும்புகிறோம் என குறிப்பிட்டார். எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. விளைவித்த பூண்டு வீட்டில் உள்ளது. விளைச்சலான பூண்டுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. வெறும் ரூ. 15 - 18க்கே கேட்கப்படுகிறது. பெரிய நகரங்களில் இதே பூண்டின் விலை ரூ. 150-க்கும் 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த விதைப்பு பருவத்திற்கு நாங்கள் காசு இல்லாமல் உள்ளோம். நாங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளோம், விளை பொருட்களுக்கு காப்பீடு செய்து உள்ளோம். அவற்றின் பிரீமியம் தொகை ரூ. 10 ஆயிரம். என்றார்.
காப்பீடு தொகை செலுத்தியும், கடந்த வருடம் காலம் தவறிய மழையினால் அழிந்த பயிர்களுக்கு இன்னும் நிவாரண தொகையை அவர் வாங்கவில்லை. விவசாயிகள் வேறு எந்தஒரு வழியும் தெரியாமல்தான் போராடி வருகிறார்கள் என கூறிஉள்ளார் நரேந்திர சிங் சாக்தாவாத்.
விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் தப்பிக்க முடியும் என விவசாயிகள் கூறிஉள்ளனர்.