சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குவிப்பது அதிகரிப்பா? - மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குவிப்பது அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குவிப்பது அதிகரிப்பா? - மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
Published on

புதுடெல்லி,

அரசியல் தலைவர்கள் ஊழல் பணத்தையும், தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்து தங்கள் கருப்பு பணத்தையும் சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்குகளில் குவித்து வைப்பதாக காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஒரு பரபரப்பு தகவல் ஊடகங்களில் வெளியானது.

அதில், 2019-ம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ரூ.6,625 கோடி குவித்திருந்தனர். ஆனால் 2020-ம் ஆண்டின் கடைசியில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள தொகை ரூ.20 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு உயர்ந்து விடடது. 13 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச குவிப்பு என கூறப்பட்டிருந்தது.

இதை மறுக்கிற விதமாக மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் வருமாறு:-

* சுவிஸ் தேசிய வங்கிக்கு வங்கிகளால் அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவை சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்பு பணத்தின் அளவை குறிப்பிடவில்லை.

* மேலும் இந்த புள்ளி விவரங்களில், இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது பிறர் வைத்திருக்கும் பணம் 3-ம் நாட்டு நிறுவனங்களின் பெயர்களில் இல்லை.

* வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் உள்ளபடியே 2019-ம் ஆண்டின் இறுதியிலேயே குறைந்து விட்டன. நம்பகமானவர்கள் மூலம் வைத்திருக்கும் நிதிகளும் 2019-ம் ஆண்டின் இறுதியில் இருந்து பாதிக்கும் கீழாகி விட்டன.

* மிகப்பெரிய அதிகரிப்பு எப்படி? வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய பிற தொகைகளா? என கேள்விகள் எழும். இவையெல்லாம், பத்திரங்கள், பிணையங்கள் மற்றும் பிற நிதி ஆவணங்களின் வடிவங்களில் வந்தவை ஆகும்.

* இந்திய நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரிப்பு, இந்தியாவில் சுவிஸ் வங்கி கிளைகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை உயர்வு, சுவிஸ் மற்றும் இந்திய வங்கிகளுக்கு இடையேயான உள் வங்கி பரிமாற்றங்களின் முன்னேற்றங்கள் போன்றவை சுவிஸ் வங்கி கணக்குகளில் இந்தியர்களின் டெபாசிட் பணம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

2020-ம் ஆண்டின் கடைசியில் தனிநபர்களும், நிறுவனங்களும் வைத்துள்ள நிதிகளின் மாற்றங்களுக்கு (உயர்வு) சாத்தியங்களான காரணங்களையும், தொடர்புடைய உண்மைகளையும் சுவிஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com