பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி

பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
Published on

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார். அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி என கூட்டத்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் வரிசை நீண்டு செல்கிறது.

மாயாவதி பேசுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். ஏழ்மை, வேலையின்மை, வன்முறைகள் அதிகரிப்பு போன்ற விவகாரங்களில் இருந்து திசைத்திருப்பும் முயற்சி மட்டும்தான். முக்கியமான விஷயம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கையாகும், அதுதொடர்பாக ஆலோசனை நடந்தால் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படும். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படுகிற நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும். நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை வராது. அடிக்கடி தேர்தல் வருகிறபோது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும். இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com