

புதுடெல்லி,
மத்திய முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்கா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் இதர செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடியை சந்திக்க ஒரு ஆண்டுக்கு முன்பே தாம் நேரம் கேட்டதாகவும், ஆனால் அவர் தன்னை சந்திக்கவில்லை என்றும் யஷ்வந்த் சின்கா அண்மையில் குற்றம்சாட்டினார். மேலும், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கட்சியில் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ராஷ்டிர மஞ்ச் என்ற பெயரில் புதிய அமைப்பை யஷ்வந்த் சின்கா இன்று துவங்கினார். இந்த அமைப்பு கட்சிகளைக் கடந்தது என்றும், நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து கவலை கொண்டவர்கள் இதில் இணையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யஷ்வ்ந்த் சின்காவின் இந்த அமைப்பில், பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா இணைந்துள்ளார். இந்த அமைப்பும் துவங்கும் நிகழ்ச்சியில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி மஜீத் மேமன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்செய் சிங் மற்றும் குஜராத் முன்னாள் முதல் மந்திரி சுரேஷ் மேதா மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் பவன் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது ஒரு அமைப்பு இல்லை எனவும், தேசிய இயக்கம் என்று குறிப்பிட்ட யஷ்வந்த் சின்கா, பாரதீய ஜனதாவில் உள்ள அனைவரும் தற்போது பயத்தில் உள்ளதாகவும் நாங்கள் யாருக்கும் பயப்பட போவது இல்லை எனவும் தெரிவித்தார். #YashwantSinha | #Rashtramanch