டெங்கு ஏற்படுத்தும் ஆபத்தான பின்விளைவு

டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.
டெங்கு ஏற்படுத்தும் ஆபத்தான பின்விளைவு
Published on

மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு. கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கான அறிகுறிகள். எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். உடலில் அரிப்பும் ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

பெரும்பாலானோருக்கு 7-ம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவும் டெங்கு வைரசானது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் மிகவும் கவனத்துடன் விரைந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com