சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடித்தால்...?

உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.
சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடித்தால்...?
Published on

காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப்பெரிய பொக்கிஷம். வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழை இலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஓட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது.

அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது. ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது.

உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான். உணவை சுவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்சைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்சருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும். எனவே பாரம்பரிய முறையைத் தெரிந்துகொண்டு உணவை பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்கு சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்? அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடிக்கக்கூடாது. சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும். உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com