மறக்க முடியாத துப்பாக்கிச் சூடு

அமிர்தசரசில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
மறக்க முடியாத துப்பாக்கிச் சூடு
Published on

இந்தியாவின் சுதந்திர சரித்திரம் பல தியாகங்களாலும், பல உயிர் பலிகளாலும், பல போராட்டங்களாலும், பலரின் வலிகளாலும் எழுதப்பட்டது. அப்படிப்பட்ட இந்திய சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத பல தருணங்கள் இருந்தாலும், அவற்றில் ஆறாத வடுவாக இருக்கும் ஒரு சம்பவம்தான், 'ஜாலியன்வாலா பாக் படுகொலைகள்'.

இந்தியாவில் சுதந்திர வேட்கை அனைத்து மக்களிடமும் பரவியிருந்த காலம் அது. 1919-களின் தொடக்கத்தில் காந்தி தலைமையிலான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டது. அவற்றில் ஒன்று சத்தியாகிரகப் போராட்டம். இந்த போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கதிகலங்கிப் போனார்கள். ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் அதிகமாயின.

1919-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. 30-ந் தேதி பெரும் கடையடைப்பு நடத்தப்பட்டது. ஒருசில இடங்களில் வன்முறை வெடித்து 8 பேர் சுடப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜாலியன்வாலா பாக் திடலில் மக்கள் கூட்டம் அதிகரித்து போராட்டம் வலுப்பெற்றது. ஏப்ரல் 13-ந் தேதி, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த திடலுக்கு, ராணுவ ஜெனரலான ரெஜினால்ட் டையர் என்பவன், 100 வெள்ளையர் படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்தான். முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

அது மிகப்பெரிய மைதானமாக இருந்ததாலும், நான்கு பக்கமும் 10 அடி உயர சுவர் இருந்ததாலும், வெளியேற ஒரே ஒரு குறுகிய பாதையே இருந்ததாலும், பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடினர். மைதானத்தில் இருந்து கிணற்றுக்குள் குதித்த தப்பிக்கலாம் என்று சிலர் குதித்தனர். இப்படி கிணற்றில் விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும், 120.

மொத்தமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் இறந்ததாகவும், 1100 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தாராயமாக 1000 பேர் இறந்திருக்கலாம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்திய சுதந்திர வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட மிகக்கொடூரமான தாக்குதல் இதுவாகத்தான் இருக்கும் என்பது பலரின் கருத்து.

இந்த படுகொலை சம்பவம் நடந்து 100 ஆண்டுகளை கடந்து விட்டாலும் கூட, அந்த நிகழ்வின் காயம் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் ஆறாத வடுவாக என்றென்றும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமிர்தசரசில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com